12-வது சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஹாக்கி 21 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிற்கான போட்டிகள் தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறன. இதில் 6 அணிகள் கலந்து கொண்டுள்ளது.லிக் சுற்றில் ஒவ்வொரு அணியும் ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லிக் ஆட்டத்தில் இந்திய அணி உள்ளூர் அணியான மலேசியாவுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பில் ஷர்தா நந்த் திவாரி , அர்ஷ்தீப் சிங் , தலேம் பிரியோபர்தா , ரோஹித் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்கள். மலேசியா அணியில் சார்பில் முகமது டேனிஷ் ஐமன் மற்றும் ஹாரிஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த நிலையில் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இந்த தொடரில் தனது 3-வது வெற்றியை பெற்றது இந்தியா. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்திய அணி அடுத்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதுகிறது.

