கல்வி நிறுவனங்கள் மற்றும் குழுமங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் உட்பட 10 சட்டத்திருத்த மசோதாக்கள் சட்டப்பேரவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன. தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச்சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை அறிமுகம் செய்தார். இதில், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மீது வரி விதிக்கவும், வசூலிக்கவும் அதிகாரம் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் அனுமதி கட்டணம் வசூலிக்கும் இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், காட்சிகள் அல்லது பிற நிகழ்ச்சிகளுக்கு கேளிக்கை வரி விதிக்க அல்லது வசூலிக்க சட்டங்கள் தற்போது இல்லை. எனவே, இத்தகைய நிகழ்ச்சிகளுக்கான அனுமதிக் கட்டணத்தில் 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கவும், வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரிச்சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொண்டு, புதிய பிரிவுகள் சேர்க்கப்படுகின்றன. இதன்படி, கல்வி நிறுவனங்கள், சங்கங்கள், குழுமங்கள் மற்றும் பிற அமைப்புகளின் வளாகங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், காட்சிகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கான அனுமதிக் கட்டணத்தில், மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்திருத்தம், வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் காப்பங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் விதமாகவும் உள்ளது. எனவே 10 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படுகிறது என கூறப்படுகிறது.

