இந்திய ராணுவத்திற்கு ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பில் 52 தனிப்பட்ட செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான திட்டத்தை இஸ்ரோ அறிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வானிலை, பேரிடர் தகவல்கள், தகவல் தொடர்புகள், பூமி கண்காணிப்பு மற்றும் வாகனங்களுக்கு வழிகாட்டுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்காக செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்பி வருகிறது. இதற்கிடையில், இந்திய ராணுவம் தனது தனிப்பட்ட தேவைகளுக்காக ஜிசாட்-7பி என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் எல்லா எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பு திறன்களை மேலும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் 2026 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதற்கான பட்ஜெட் ரூ.3 ஆயிரம் கோடி ஆகும். ஜிசாட்-7 பி மேம்பாட்டுக்காக மத்திய அரசு நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் (என்.எஸ்.ஐ.எல்.) ரூ.3 ஆயிரத்து 100 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லைகளை கண்காணிக்க, இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் நடவடிக்கைகளை கவனிக்க, மேம்பட்ட சென்சார்கள் மற்றும் உயர் தெளிவுத்திறன் படங்களின் அமைப்புகள் முக்கியமாக செயல்படுகின்றன. மேலும், அனைத்து வானிலை நிலைகளிலும் 24 மணி நேரம் தொடர்ந்து உருவாகும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதிலும் ராணுவ செயற்கைக்கோள்களின் பங்கு மிகவும் முக்கியமானது.இந்தியாவின் பாதுகாப்பு படைகளை மேம்படுத்தும் ஒரு புதிய முயற்சியாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய ராணுவத்திற்கான உளவுத்துறை சேகரிப்பு, கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளுக்காக ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பில் 52 தனிப்பட்ட செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளது. இஸ்ரோவின் இந்த முக்கிய திட்டத்தை பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் அறிவித்துள்ளார்.

