மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அனைத்து நூல்களும் தமிழ்நாடு அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக த்மிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..”தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூ.14.42 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலங்களில் 108 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை செய்து, அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகையாக 7 கோடியே 76 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார் என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கவையாகும்.
இத்தகைய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத் தலைவர் கருணாநிதியின் அனைத்து நூல்களும் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் கருணாநிதியின் செழுமையான நூல்களை ஊன்றிப் படிக்க அரியதொரு வாய்ப்பாக அமையும்.

