பிரதமர் மோடியின் உக்ரைன் பயணத்தை போலவே, அவர் பயணிக்க உள்ள ரயிலும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரதமர் மோடியின் 20 மணிநேர பயணத்திற்காக பாதுகாப்பு மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு விமான சேவையே இல்லாத நிலை உள்ளது. உக்ரைன் வரும் உலக தலைவர்கள் ரயில் மூலமே உக்ரைன் வருகின்றனர். கடந்த ஆண்டு உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மன் சான்சிலர் ஓலப் ஸ்கால்ஜ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி மற்றும் ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடோ ஆகியோர் ரயில் மூலமே உக்ரைன் நாட்டிற்கு பயணித்தனர்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் வெளிநாடுகளுக்கு ரயில் பயணத்தையே நம்பி உள்ளார். உலக தலைவர்கள் பயணிக்கும் இந்த ரயில் TRAIN AIRFORCE ONE என அழைக்கப்படுகிறது. தலைநகர் கீவில் 7 மணி நேரங்களை செலவிடும் பிரதமர் மோடி, அதற்காக 20 மணிநேரம் ரயிலில் பயணிக்க உள்ளார்.
இந்த அதிநவீன ரயிலில் பயணம் மேற்கொள்வோரை கவரும் வண்ணம் உட்புறம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தலைவர்கள் தங்கும் அறைகள் பல வேலைப்பாடுகளுடன் மரத்தில் செய்யப்பட்டு உள்ளன. முக்கிய ஆலோசனை நடத்த விசாலமான மேஜைகள், சொகுசான சோபா மற்றும் டிவி பொருத்தப்பட்டு உள்ளன.
அதிநவீன வசதிகளை கொண்ட இந்த ரயில், 2014-ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகளை கவருவதற்காக உருவாக்கப்பட்டது. பிறகு ரஷ்யா தாக்குதல் காரணமாக, உலக தலைவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு இந்த ரயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

