பிரம்ம யுகம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மலையாள நடிகர் மம்மூட்டிக்கு கேரள அரசின் மாநில விருது வழங்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரம்ம யுகம் திரைப்படம் அந்த மொழியில் மட்டுமின்றி இந்திய மொழிகள் பலவற்றிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், 18-ஆம் நூற்றாண்டின் கேரளா பின்னணியில் ஒரு மர்மமான மாளிகையில் நடக்கும் ‘பீரியட் ஹாரர்’ கதையைச் சொல்கிறது. இப்படத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், படம் முழுவதுமே கருப்பு-வெள்ளை நிறத்தில் படமாக்கப்பட்டதுதான்.
இது பார்வையாளர்களுக்கு ஒரு விதமான மர்மமான மற்றும் திகில் நிறைந்த உணர்வை படம் முழுவதும் கடத்துகிறது. இப்படத்தின் மையக்கதை, ஒரு பழைய மாளிகையில் தஞ்சம் புகும் ‘பாணன்’ எனும் நாட்டுப்புறப் பாடகனுக்கும், அந்த மாளிகையின் உரிமையாளரான கொடுமோன் போற்றிக்கும் இடையே நடக்கும் அதிகாரப் போராட்டத்தை விவரிக்கிறது.
மம்மூட்டி இதில் ‘கொடுமோன் போற்றி’ என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அர்ஜுன் அசோகன் மற்றும் சித்தார்த் பரதன் ஆகியோர் மம்மூட்டிக்கு இணையாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.
வெறுமனே பேய்க் கதையாக மட்டுமில்லாமல், மனிதனின் பேராசை, சாதிய அடுக்குமுறை மற்றும் அதிகாரம் ஒரு மனிதனை எப்படி அடிமைப்படுத்துகிறது என்ற ஆழமான கருத்துகளையும் இப்படம் பேசியது. கிறிஸ்டோ சேவியரின் மிரட்டலான பின்னணி இசை மற்றும் படத்தின் கலை இயக்கம் இப்படத்திற்கு உலகத்தரத்தை கொடுத்தன.
இந்த நிலையில், பிரம்ம யுகம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியற்காக நடிகர் மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருதை கேரள அரசு வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.

