2014ஆம் ஆண்டு முதல், மனதின் குரல் என்ற நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடையே வானொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அண்மை காலமாக இந்நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்நிலையில் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சி ஜூன் 30ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் இது தொடர்பான தங்களது கருத்துகளை தெரிவிக்குமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். நமோ செயலி உள்ளிட்டவற்றின் வாயிலாக கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு தொடங்கிய மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி தொடர்ந்து மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் ஒலிபரப்பாகி வருகிறது. மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு குறித்தும் பிரதமர் மோடி பல முறை பேசியிருக்கிறார்.
மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது பகுதியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் பழங்குடியினப் பெண்கள் சூழலுக்கு உகந்த மண்குவளைகள் தயாரித்து வருகின்றனர். வேலூரில் 20,000 பெண்கள் ஒன்றிணைந்து நாக நதியை தூர்வாரி சீரமைத்து மீட்டெடுத்துள்ள பெருமைக்குரியது என்று பேசியிருந்தார்.
105 ஆவது அத்தியாயத்தில் பேசிய மோடி, சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜேந்திர பிரசாத் என்பவரை, பாராட்டினார். கடந்த 30 ஆண்டுகளாக 200-க்கும் அதிகமான புறாக்களை ராஜேந்திர பிரசாத் வளர்த்து வருவதை குறிப்பிட்ட பிரதமர், புறாக்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்டவை வழங்கி அதை அழகாய் பராமரித்து வருவதாக தெரிவித்தார்.
தனது வருவாயில் பெரும் பங்கை பயன்படுத்தி, புறாக்களுக்கு தேவையானவற்றை இந்த ஆட்டோ ஓட்டுநர் செய்து வருவதாகவும், இதனை கேள்விப்பட்டதும் தான் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.