விசிக கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ஆறுமாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார் என கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். கட்சியின் நலன்களை முன்னிலைப்படுத்தி, தலைமை நிர்வாகக் குழுவில் உள்ள கட்சித் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் ஆகிய மூவரின் ஒப்புதலுடன், ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துகள், தமிழக அரசியல் சூழலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருமாவளவன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். அதில் பட்டியலின மக்கள் பங்கேற்க வேண்டும். இங்கே மன்னராட்சிதான் நிலவுகிறது. கேள்வி கேட்டால் உடனே சங்கி என்கிறார்கள். தமிழகத்தில் மன்னராட்சிக்கு இடமில்லை. 2026-ல் மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்படும்” என ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார்.இந்நிலையில், விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன், துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை ஆறுமாத காலத்திற்கு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இதற்கான காரணமாக, திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதவ் அர்ஜுனா கட்சியின் நலன்களுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் முன்னணி தோழர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வில் கூறப்பட்டது, கட்சியின் தலைமையின் அறிவுறுத்தல்களை மீறி, அவர் தொடர்ந்து எதிர்மறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இத்தகைய செயல்கள், மேலோட்டமாகப் பார்வையிடும் போது, கட்சியின் நலனுக்கும் அதிகார வலிமைக்கும் ஆதரவாகத் தோன்றினாலும், அவை கட்சியின் மற்றும் தலைமையின் மீது உள்ள நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. இதனால், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்கள் உருவாகியுள்ளன. இதனை கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிலைப்படுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவரைக் கொண்ட தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார், என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

