மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், 5-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 111 பேர் கொண்ட இந்த வேட்பாளர்கள் பட்டியலில், ஆந்திரா, பீகார், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அண்மையில் பாஜகவில் இணைந்த அபிஜித் கங்கோபாத்யாய், மேற்கு வங்கத்தின் தம்லுக் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

