கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.
இந்த நிலையில் ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவில் இப்படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோவின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த வீடியோ கமலின் பிறந்த நாளான நவ.7-ல் (நாளை) வெளியாகவுள்ளது. இதற்கு முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு படத்தின் பெயர் அறிவிக்கப்படும் என ராஜ்கமல் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், அப்படத்திற்கு THUG LIFE என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ள அறிமுக வீடியோவில் வரலாற்று போர் வீரர் போன்று நீண்ட தலைமுடி, தாடி மற்றும் வித்தியாசமான வெள்ளை நிற ஆடையில் வரும் கமல், தன் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கன், காயல்பட்டினக்காரன் என கூறுவதோடு, தன்னை கிரிமினல், யாகுசா எனவும் குறிப்பிடப்படுகிறார். யாகுசா என்பது ஜப்பானிய நாட்டில் மாஃபியாவைக் குறிக்கும்.
காலன்(எமன்) தன்னை தேடி வருவது இது முதல்முறை இல்லை என கூறியதோடு, கடைசி முறையும் இல்லை என்றபடி ஆக்ரோஷமாக சண்டையிடுகிறார். மீண்டும் தன் பெயரை நினைவில் வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தும் கமல், புன்சிரிப்போடு THUG LIFE காட்டுகிறார்.
இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் மருதநாயகத்தின் சாயல் இருப்பதாக இணையதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

