இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 2027 ஐபிஎல் சீசன் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக (Team Mentor) தோனி புதிய பொறுப்பை ஏற்க உள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சிஎஸ்கே அணி தனது சமூக வலைதளப் பக்கத்தில், தோனியுடனான பிணைப்பு என்றென்றும் தொடரும் என்றும், அணியின் தொடக்க காலம் முதல் பல வெற்றிகளுக்கும் நினைவுகளுக்கும் தோனி முக்கிய காரணமாக இருந்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளது.45 வயதான தோனி, ஏற்கெனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். தற்போது ஐபிஎல் பயணத்தையும் முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது நீண்ட ஐபிஎல் பயணத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த தோனி, அணியின் வெற்றிகரமான வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.இனி வீரராக இல்லாவிட்டாலும், ஆலோசகராக அணியுடன் இணைந்து தனது அனுபவத்தையும் வழிகாட்டுதலையும் வழங்க உள்ளார். இதன் மூலம் சிஎஸ்கே அணியுடனான தோனியின் உறவு தொடர்கிறது. ரசிகர்களால் அன்புடன் ‘தல’ என்று அழைக்கப்படும் தோனியின் புதிய பொறுப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
