Mumbai Trans Harbour Link (MTHL) என்று பெயரிடப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய கடல் பாலம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
முன்னதாக இந்த கடல் பாலத்தை கட்டி முடிப்பதாக திட்டமிடப்பட்ட கால வரையறையை தாண்டி பணிகள் நடைபெற்றதால் மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். கடந்த செப்டம்பர் மாத இறுதியில் 96 சதவீத பணிகள் நிறைவு பெற்றிருந்த நிலையில், எஞ்சி இருந்த பணிகளை முடிப்பதற்கு மூன்று மாதங்களுக்கும் மேலான காலம் எடுத்துக் கொள்ளப்பட்டதற்கு பலத்த விமர்சனங்களை அரசியல் கட்சிகள் முன்வைத்தன.
கடந்த 2014 ஆம் ஆண்டில் கடல் பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அப்போது திட்ட மதிப்பீடு ரூ.11,000 கோடி என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பாலத்தின் கட்டுமான பணிகளை 2023 ஆம் ஆண்டில் நிறைவு செய்யும்போது மொத்த செலவினம் ரூ.17,800 கோடியில் நிறைவு பெற்றது. திட்டமிடப்பட்டதை காட்டிலும் 61.81% கூடுதலாக செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் மொத்த நீளம் 22 கிலோமீட்டர் ஆகும். இதில் கடலுக்கு நடுவே 16.5 கிலோமீட்டர் தொலைவிற்கு பாலம் அமைந்துள்ளது. உலகின் மிக நீளமான கடல் பாலமாகவும், இந்தியாவின் மிக நீளமான பாலமாகவும் இது கருதப்படுகிறது.
தெற்கு மும்பை பகுதியில் உள்ள சீவ்ரி என்னும் இடத்தில் தொடங்கி தானே க்ரீக் என்னும் பகுதியை கடந்து சிர்லே என்னும் பகுதியில் இந்த பாலம் நிறைவு பெறுகிறது. அதன் எல்லைகள் நவிமும்பை பகுதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் மூலமாக, மும்பை முதல் நவிமும்பை வரையிலான பயண நேரம் 20 முதல் 25 நிமிடங்களாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நவிமும்பை பகுதியில் இருந்து மும்பைக்கு பல்வேறு மூலதன பொருட்களை மிக எளிமையாக கொண்டு வந்து சேர்க்க முடியும் என்று கருதப்படுகிறது. இதனால் பயணத்திற்கான எரிபொருள் செலவு உள்பட பல வகைகளில் ஒட்டு மொத்த உற்பத்தி செலவுகள் குறையும் என்று கூறுகின்றனர்.

