அதிமுக தலைமையிலான தமிழ்நாடு என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள பாஜக, அமமுக, பாமக ஆகிய மூன்று கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிவு செய்து அறிவித்தபிறகு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் டெல்லி சென்றது ஏன் என்றும், நாங்கள் டெல்லி சென்றால் முதலமைச்சர் அச்சப்படுகிறார் எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் அடுத்தடுத்து டெல்லி சென்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஈபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயலின் சென்னை பயணம் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் பியூஷ் கோயல் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கும் சென்னை வந்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் என்.டி.ஏ. கூட்டணி தலைவர்களான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி, தமாக தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் என்.டி.ஏ. கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, பாஜகவுக்கு 27, அன்புமணி பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 இடங்கள் ஒதுக்கப்படுகிறது என அறிவித்தார். மேலும் மற்ற கட்சியினருக்கான தொகுதி பங்கீடு விரைவில் அறிவிக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
என்.டி.ஏ. கூட்டணி 210 இடங்களில் வென்று, அதிமுக பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும். நாங்களும், கூட்டணி தலைவர்களும் டெல்லி சென்றால், அதனை வைத்து திட்டமிட்டு முதலமைச்சர் அவதூறு பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அனைவரும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். அந்த வகையில் எங்கள் கூட்டணியில் உள்ள கருத்துகளை பரிமாற்றம் செய்ய டெல்லி செல்கிறோம். தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய டெல்லி செல்கிறோம். ஆனால், நாங்கள் டெல்லி சென்றாலே முதலமைச்சர் அச்சப்படுகிறார். கூட்டணி தலைவர்கள் இன்று அதிமுக தலைமை அலுவலகம் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீட்டை அறிவித்துள்ளோம். மற்றக் கட்சியினருக்கான தொகுதி பங்கீடு அறிவிப்புக்கு பிறகு அதிமுக எத்தனைத் தொகுதிகளில் போட்டி என்பது உங்களுக்கு தெரியவரும்” எனத் தெரிவித்தார்.

