புதுச்சேரி, கேரளா, அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்தது. கடைசி நாளில் மனு தாக்கல் செய்யவேட்பாளர்கள் குவிந்ததால் தேர்தல் அலுவலகங்கள் களைக்கட்டியது. தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு கடந்த 15ம் தேதி வெளியானது. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கியது.
புதுச்சேரியில் முதல் 2 நாளில் யாரும் விருப்ப மனு அளிக்கவில்லை. கடந்த 18ம் தேதி அமாவாசை தினத்தில் இருந்து மனுதாக்கல் சூடுபிடிக்கத் தொடங்கியது. கடந்த 22ம்தேதி (வெள்ளி) முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட 118 பேர் ஒரேநாளில் மனுதாக்கல் செய்தனர். மாகேயில் நேற்று முன்தினம் ஒருவர் மனுதாக்கல் செய்தார். இதன்மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கு இதுவரை 119 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர்.
இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையில் 6 கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை நேற்று இறுதி செய்தது. இதனால் அனைவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (24ம் தேதி) நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற வரும் 26ம் தேதி கடைசி நாளாகும். இதனால் புதுச்சேரி, அசாம், கேரளாவில் தேர்தல் களைகட்டியுள்ளது.

