வட கொரியாவில் நடைபெற்ற ராணுவ பயிற்சியில், அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்னின் 13 வயது மகள் கிம் ஜு ஏ பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பியாங்யாங்கில் நடைபெற்ற இந்த பயிற்சியை கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து நடந்த பயிற்சியில் காலாள் படையின் போர் உத்திகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்வுகளில் கிம் ஜு ஏ தொடர்ந்து தந்தையுடன் கலந்து கொள்வது, அவர் எதிர்கால வாரிசாக உருவாக்கப்படுகிறார் என்ற கருத்தை வலுப்படுத்தியுள்ளது.இந்த பயிற்சியின் போது கிம் ஜு ஏ ராணுவ பீரங்கியை இயக்கியதும் கவனம் ஈர்த்தது. அவரின் அருகில் கிம் ஜாங் உன் அமர்ந்திருந்தார், மேலும் ராணுவ வீரர்களும் உடன் இருந்தனர். இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வட கொரிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அரசு ஊடகங்கள் கிம் ஜு ஏவை “மதிப்புமிக்க குழந்தை” என குறிப்பிடுகின்றன. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவர் தான் அடுத்த தலைவராக இருக்கலாம் என சர்வதேச நிபுணர்கள் கணிக்கின்றனர்.

