இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் ஜூலை 30 விண்ணில் ஏவப்படுகிறது.

அரசியல் அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா உலகம் செய்திகள் விண்வெளி சார்ந்தவை

புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன நிசார் செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக இஸ்ரோ ஜூலை 30ம் தேதி விண்ணில் செலுத்துகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக நிசார் (NASA – ISRO Synthetic Aperture Radar) என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன. இதற்கான ஒப்பந்தம் 2014 செப்டம்பர் 30-ல் கையெழுத்தானது. அதன் பின்னர் இரு நாடுகளின் விஞ்ஞானிகள் கூட்டுழைப்பில் சுமார் 12,000 கோடி மதிப்பிலான நிசார் செயற்கைக் கோளின் தயாரிப்பு பணிகள் கடந்தாண்டு நிறைவு பெற்றன. அதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட சோதனைகள் முடிந்த நிலையில், நிசார் செயற்கைக் கோள் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகேட் டாவில் உள்ள 2-வது ஏவு தளத்தில் இருந்து ஜூலை 30-ம் தேதி மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதற்கான இறுதி கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்த செயற்கைக் கோள் புவியில் இருந்து 743 கி.மீட்டர் தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. நிசார் புவி கண்காணிப்புக்காக தயாரிக்கப்பட்ட அதி நவீன ரேடார் செயற்கைக்கோளாகும். இதன் எடை 2,392 கிலோவாகும். இதன் ஆயுட்காலம் 3 முதல் 5 ஆண்டுகள். இது பூமியின் மாறிவரும் சூழல்கள் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த செயற்கைக்கோள் முழு பூமியையும் 12 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி, துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை இரவு, பகல் என அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வழங்குகிறது. இதற்காக எல் பேண்ட், எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் செயற்கைக்கோளில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரே செயற்கைக்கோளில் 2 அலைவரிசைகள் கொண்ட கருவிகள் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். மேலும், நிசார் அனுப்பும் தகவல்களை உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களும் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *