தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு; மேலும் மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என தகவல்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மருத்துவம் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி

முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மூன்று நாட்கள் முதல்வர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி சென்றபோது, அவருக்குத் தலைசுற்றல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் ஆகியோர் உடன் சென்றனர். அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறுவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து முதலமைச்சர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைக்குச் சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலமாக இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார். அவர் விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவார்” என்று விளக்கமளித்தார்.
இந்நிலையில் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மூன்று நாட்கள் முதல்வர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில பரிசோதனைகள் மேற்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும், மருத்துவமனையில் இருந்தவாறே அவர் தனது பணிகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *