பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சைப்ரஸ் நாட்டிற்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் சிவப்பு கம்பளம் வரவேற்பு அளித்தார். அங்குள்ள இந்திய வம்சாவளியினரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த 20 ஆண்டுகளில் சைப்ரஸ் சென்ற முதலாவது இந்திய பிரதமர் மோடி ஆவார். நேற்று சைப்ரஸ் தலைமை செயல் அதிகாரிகளின் மன்ற கூட்டத்தில் ,சைப்ரஸ் நாட்டின் உயரிய ’கிராண்ட் க்ராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மகாரியோஸ் III’ விருதை இருநாட்டு உறவின் அடையாளமாக அந்நாட்டின் அதிபர் கிறிஸ்டோடெளலிடிஸ், பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவித்தார். பின்னர் அதனை பெற்ற பிரதமர் மோடி கூறியதாவது; கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் III விருதுக்காக, சைப்ரஸ் அரசுக்கும், சைப்ரஸ் மக்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் மரியாதை ஆகும். இந்தியாவிற்கும், சைப்ரஸ் நாட்டிற்கும் இடையே நல்ல உறவுகள் உள்ளது. இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்பணிக்கிறேன். அனைத்து இந்தியர்களின் சார்பாக, இந்த கவுரவத்தை மிகுந்த பணிவுடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.

