சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். 294 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வந்தே பாரத் ரயில் சேவை பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தற்போது வரை 10 வந்தே பாரத் ரயில்கள் மூலம் பல்வேறு நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை – கோவை ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை – மைசூரு இடையில் அதிவேக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையானது சென்னை – கோவை ஆகிய நகரங்களுக்கு இடையில் வரவுள்ளது. தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் இதுவாகும். அதுமட்டுமின்றி தாம்பரம் – செங்கோட்டை இடையில் வாரம் மூன்று நாட்கள் இயக்கப்படும் ரயில் சேவையும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை திறந்து வைக்கிறார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.