சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6 வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16 ஆம் தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப் பணியாளர்கள், 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானத்துக்கு தடை விதிக்கக் கோரி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவர் கு.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இரு மண்டலங்களிலும் பணியாற்றும் 2042 நிரந்தரப் பணியாளர்கள், வேறு மண்டலங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும், 1953 தற்காலிகப் பணியாளர்கள் ஒப்பந்த நிறுவன விதிகளின்படி பணியமர்த்தப்படுவார்கள் எனக் கூறினாலும், அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தொழிலாளர் நீதிமன்ற அனுமதியின்றி, தூய்மைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

