மூன்று நாட்கள் பயணமாக இந்தியா வந்தார் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகா; மீனவர் பிரச்சனையை தீர்க்க விருப்பம் என தகவல்

அரசியல் இந்தியா இலங்கை உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

மூன்று நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகாவிற்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கை அதிபராகப் பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக அனுரகுமார திசநாயகா நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை மத்திய அமைச்சர்கள் வரவேற்றனர். இந்நிலையில், இன்று காலை இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகாவிற்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பிறகு இலங்கை அதிபரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகா இருவரும் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகா, “இலங்கை அதிபரான பிறகு இதுதான் எனது முதல் வெளிநாட்டுப் பயணம். இலங்கை அதிபராகப் பதவியேற்ற பிறகு, இது எனது வெளிநாட்டுப் பயணம். எனது முதல் மாநிலப் பயணமாக டெல்லிக்கு வர முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காகவும், நான் உட்பட முழு தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கும் இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடிக்கும் குடியரசுத் தலைவர் முர்முவிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த வழி வகுத்துள்ளது. இந்தியாவின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் எங்களது நிலத்தை எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று இந்திய பிரதமரிடம் உறுதி அளித்துள்ளேன். இந்தியாவுடனான ஒத்துழைப்பு நிச்சயமாகச் செழிக்கும், மேலும் இந்தியாவுக்கான எங்கள் தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது. எனவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் தொல்லையாக மாறியுள்ள மீனவர் பிரச்சினைக்கு நீடித்த மற்றும் நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *