தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று சென்னையில் இருந்து 1.10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கான நடவடிக்கையாக, அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், நேற்று முதல் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்று முதல் இயக்கம் தொடங்கியது. சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன, மேலும் இப்பேருந்து நிலையங்களை 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயக்கபடும் என அறிவித்துள்ளது. முதல் நாளான நேற்று நள்ளிரவு 12 மணிக்கு நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் மற்றும் 369 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இவ்வாறு இயக்கப்பட்ட 2,461 பேருந்துகளில் 1,10,475 பயணிகள் வரை பயணித்துள்ளனர். மேலும், தீபாவளிப் பண்டிகையையொட்டி வெளியூருக்குச் செல்ல 1,43,862 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

