நேபாளத்தில் இடைக்காலப் பிரதமராக சுஷிலா கார்கி பதவியேற்பு; நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சிறப்பை பெறுகிறார்

அரசியல் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பெண்கள் போராட்டம்/ கலவரம் மற்றவை முதன்மை செய்தி

நேபாளத்தில் சுஷிலா கார்கி இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டு, அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சிறப்பை பெற்றுள்ளார்.
ஊழலுக்கு எதிராக நேபாளத்தில் இளைஞர்கள் இணைந்து நடத்திய போராட்டம், வன்முறையாக மாறி, அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி, அதிபர் ராம் சந்திர பவுடல் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து அங்கு ராணுவம் அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.
இதனையடுத்து அமைதி திரும்பியுள்ள நேபாளத்தில், 5,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காணொளி வாயிலாகக் கூடி நாட்டின் இடைக்காலத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என விவாதித்தனர்.
அதில், காத்மாண்டு மேயர் பாலேன் ஷா, அந்நாட்டு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி, அந்நாட்டு மின்சார ஆணையத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி குல்மான் கிஷிங் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றன.
இந்நிலையில், தற்போது நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி பதவி ஏற்றார். இதன் மூலம், இவர்தான் நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் எனும் சிறப்பையும் பெற்றுள்ளார்.
ஏற்கனவே அந்நாட்டின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்ற முதல் பெண் என்ற வரலாற்றைக் கொண்டிருந்த சுஷிலா கார்கி தற்போது, அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் எனும் சிறப்பையும் பெறுகிறார்.
நேபாளத்தில் பிறந்த சுஷிலா கார்கி முதலில் ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கினார். பின்னர் சட்டம் பயின்று வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் பணியாற்றி, 2016ஆம் ஆண்டு நேபாள உச்ச நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வரலாறு படைத்தவர் சுஷிலா கார்கி. அச்சமற்ற தீர்ப்புகள், ஊழலைப் பொறுத்துக்கொள்ளாததற்காக நேபாள மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்டவர். ஊழல் குற்றச்சாட்டில் அமைச்சரையே சிறையில் அடைத்தது உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகள் மூலம் அச்சமற்றவர் என மக்களிடம் பெயர் பெற்றவர்.
இதனால், அரசுடன் கடுமையான மோதலையும் அவர் சந்தித்துள்ளார். 2016ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றதில் இருந்து ஓராண்டுக்குள் அதாவது 2017ஆம் ஆண்டு அவரைப் பதவி நீக்கம் செய்யத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதாகச் செய்திகள் உள்ளன. தற்போது நேபாளத்தின் இடைக்கால பிரதமராகப் பதவியேற்றிருப்பதன் மூலம், நேபாள வரலாற்றில் முதல் பெண் பிரதமர் சுஷிலா கார்கி என வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *