சிங்கள கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது – பாமக நிறுவனத் தலைவர் கண்டனம்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள்

12 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் அனுமதிச் சீட்டு பெற்று மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி மார்க்கோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகை தடுத்து நிறுத்தினர்.
அதிலிருந்த 12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அதிகாரிகள், விசைப்படகுடன் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்டுள்ள 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையின் இச்செயலுக்கு ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து டிவிட் செய்துள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 25 நாட்களாக இல்லாமல் இருந்தது. அதுமட்டுமின்றி இதுவரை கைதான அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதனால், மீனவர் சமுதாயம் நிம்மதி அடைந்த நிலையில் தான் அடுத்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது!
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் கவலை தெரிவித்திருக்கிறார். இதனால் பயன் ஏற்படாது. இலங்கையை கண்டிப்பதும், எச்சரிப்பதும் தான் இத்தகைய அத்துமீறல்களை தடுத்து நிறுத்தும்!
இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் சிக்கலுக்குத் தீர்வு காண இருதரப்பு மீனவர்களின் பேச்சுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்!” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *