கடந்த ஆண்டு, அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டது.
அதேநேரம், அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா என்பதை உயர் நீதிமன்றம் தான் முடிவுசெய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மட்டுமே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதற்கிடையில் நடைபெற்ற பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் நடத்தப்பட்ட தீர்மானங்கள் செல்லும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்று உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அதற்கு இதுவரையில் இந்தியத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை.
முன்னதாக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் அளித்த விளக்கத்தையும் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இந்தநிலையில், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணனங்கள் அ.தி.மு.க சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.