“தி பேமிலி மேன் 2″ சர்ச்சை – “எங்களை வெகுவாக பாராட்டுவீர்கள்” டைரக்டர்கள் விளக்கம்

சின்னத்திரை செய்திகள்

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தின் வெளியீடாய் ஜூன் மாதம் வெளிவர இருக்கிறது “தி பேமிலி மேன் 2″. மனோஜ் பாஜ்பாய், சமந்தா ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களாய்க் கொண்ட இந்தத் தொடரின் ட்ரைலர் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. ‘தி பேமிலி மேன்’ முதல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த மாதம் வெளியாக இருக்கும் ” தி பேமிலி மேன் 2″ பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில் அதன் ட்ரைலர் கடும் விமர்சனத்துக்குள்ளாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்தத் தொடரில் சமந்தா ஏற்று நடித்துள்ள தமிழ் ஈழ போராளி வேடத்தை, தீவிரவாதி எனவும், விடுதலைப் புலிகளுக்கு ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது போலவும் காட்சிகள் சித்தரிப்பதாய் கடும் விமர்சனம் எழுந்தது.

நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவரான சீமான் ” இந்தத் தொடர் வேண்டுமென்றே இலங்கைத் தமிழர்களை அவமதிப்பதாகவும், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். மதிமுக வின் நிறுவன தலைவரான வைகோ அவர்கள், ” இந்தத் தொடரை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என மத்திய அமைச்சரான பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்தச் சர்ச்சைகளைப் பற்றி தொடரின் தயாரிப்புக் குழு எதுவும் கூறாமல் மெளனம் காத்து வந்த நிலையில் அதன் இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே இது குறித்தான அறிக்கை ஒன்றை கூட்டாக வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ” சிலர் ட்ரைலரில் காண்பிக்கப்பட்டிருந்த ஒன்றிரண்டு காட்சிகளை மட்டுமே கண்டு விட்டு தவறான அனுமானத்தைக் கொண்டுள்ளனர். எங்கள் முக்கிய நடிகர்கள் தொடங்கி, திரைக்கதை எழுத்தாளர்கள் வரை பலரும் தமிழர்களே. நாங்கள் அவர்களின் உணர்வுகளை நன்கு அறிவோம். தமிழ் மக்கள் மீதும் அவர்களின் கலாச்சாரத்தின் மீதும் பெருமதிப்பு கொண்டுள்ளோம். சீசன் ஒன்றைப் போலவே சீசன் இரண்டிற்காகவும் ஒரு பொறுப்பான, எங்கள் எண்ணங்களையும், வலியையும் உங்களில் கடத்தக் கூடிய ஒரு சிறந்த தொடருக்காய் வெகுவாய் உழைத்துள்ளோம். எனவே அனுமானங்களைத் தவிர்த்து தொடர் வெளியாகும் வரை பொறுத்திருந்து, அதை நீங்கள் கண்டால் எங்களை வெகுவாக பாராட்டுவீர்கள்”, என்று தங்களின் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அமேசான் அது வெளியிட்ட ட்ரைலரை திருத்தம் செய்து மீண்டும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *