திருப்பதி லட்டு பிரசாதத்தில், மாட்டுக்கொழுப்பு கலந்தது குறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியது உண்மைதான் என திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது என முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கான வாய்ப்பே கிடையாது என்று தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி கூறியிருந்த நிலையில், ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா இது பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இதையடுத்து நேற்று மாலை, லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்கப் பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சிப் பிரமுகர் வெங்கட்ராமனா ரெட்டி ஊடகங்களுக்கு வெளியிட்டார்.
அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிசக் கொழுப்பு ஆகியவை கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பாமாயில் கலந்து இருப்பதும் அதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா இதுகுறித்து மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளார். மேலும் ஆந்திர அரசிடம் உள்ள விவரங்களைக் கொடுத்தால், FSSAI மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி சியாமளா ராவ் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் கூறும்போது, “நெய்யை ஆய்வு செய்ய எங்களிடம் லேப் இல்லை என்பதைப் பயன்படுத்தி, தரமற்ற நெய்யை சப்ளை செய்துள்ளனர். லட்டுவின் தரம், நெய்யை ஆய்வு செய்ய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டதையடுத்து, ஏ.ஆர்.டைரி புட்ஸ் மாதிரிகளைச் சோதனை செய்ததில் அவர்கள் தரமற்ற நெய் விநியோகம் செய்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் சப்ளை செய்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பாமாயில் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நெய் சப்ளை செய்தவர்களை அழைத்து எச்சரிக்கை செய்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.

