சங்கீத சபைகளில் தமிழ் பாடல்களும் பாடப்பட வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை மியூசிக் அகேடமியின் 96வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாமிநாதன் கலந்து கொண்டனர். அவ்விழாவில் மியூசிக் அகேடமியின் ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். இசைக் கலைஞர்கள் நெய்வேலி சந்தானகோபாலன், லால்குடி கிருஷ்ணன், விஜயலக்ஷ்மி, பக்தவச்சலம் போன்றோருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
1927ம் ஆண்டு நடந்த இசை மாநாட்டில் இந்திய பாரம்பரிய இசையை வளர்ப்பதற்காக ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த சங்கீத அகேடமி 96 ஆண்டுகள் செயல்படுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
அவ்வாறு இசையை வளர்க்க ஆரம்பித்த சங்கீத அகேடமியின் நூற்றாண்டு விழாவிலும் பங்கேற்பேன். தமிழகத்தில் சங்ககாலம், காப்பியகாலம், பக்திகாலம் என்று எல்லா காலக்கட்டத்திலும் இசை வளர்ந்தது. ஆகையால் இதுபோன்ற அகேடமிகள் நடத்தும் இசை விழாக்களில் தமிழ் பாடல்களும் பாட வேண்டும் என்பது என் கோரிக்கையாகும். மொழி இருக்கும்வரை தான் கலையும் இருக்கும். இவ்வாறு விழாவில் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.