அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள ஒரு பாலம், கன்டெய்னர் கப்பல் மோதியதில், படாப்ஸ்கோ ஆற்றில் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.பல வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக தற்போது சம்பவ இடத்தில் இருக்கும் பால்டிமோர் நகர தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாலம் முழுவதுமாக தண்ணீரில் இறங்குவதை சமூக ஊடகங்களில் காணொளிகளில் காண முடிகிறது.
மோதிய கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் வந்ததாகத் தெரியவந்துள்ளது.
பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து மேரிலேண்ட் மாநிலத்தில் அவசர நிலையை ஆளுநர் வெஸ் மூர் அறிவித்துள்ளார்.
“பைடன் நிர்வாகத்திலிருந்து மத்திய (Federal) சேவைகளை விரைவாகப் பெறுவம் வகையில் நாங்கள் ஒரு இடைநிலைக் குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.” என்று அவர் கூறினார்.
“பாதிக்கப்பட்டோரை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும், அனைவரின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
மீட்பு முயற்சிகளை மேற்கொண்டு வரும் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
பாலத்தில் மோதிய கப்பல் மார்ஸ்க் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
கப்பல் நிறுவனமான மார்ஸ்க், இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது.
“பால்டிமோரில் நடந்தது பற்றி நாங்கள் திகிலடைந்துள்ளோம். பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்,” என்று அந்த நிறுவனம் கூறுகிறது.
கப்பலில் மார்ஸ்க் பணியாளர்கள் யாரும் இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாலத்தில் மோதிய கப்பலை இயக்கிய சினெர்ஜி மரைன் குழுமத்திற்கான தகவல்தொடர்புகளை கையாளும் அதிகாரியான பால் ஆடம்சன், “கப்பல் பணியாளர்கள் அனைவரும் இந்தியர்கள். அவர்களுடன் 22 பேர் இருந்தனர்” எனத் தெரிவித்தார்.
கப்பல் குழுவைச் சேர்ந்த ஒருவரது தலையில் ஒரு சிராய்ப்பு ஏற்பட்டது. ஆனால் ஆனால் காயங்கள் ஏதும் இல்லை என்று அவர் கூறுகிறார்.
மியாமி மற்றும் ஓக்லஹோமாவில் இருந்து, நிறுவனத்தின் அமெரிக்க குழுவின் இரண்டு உறுப்பினர்கள் பால்டிமோர் சென்று விசாரித்து வருகின்றனர் அவர் குறிப்பிட்டார்.
இரண்டு மாலுமிகள் இருக்கும்போது இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது அசாதாரணமானது என்றும் அது எண்ணற்ற காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஆடம்சன் கூறினார்.

