வங்கதேசத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் வழக்கமாக அந்நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரகுமான் படம் இடம் பெற்றிருக்கும். இவரது மகள் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராக கடந்தாண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். வங்கதேச சுதந்திரத்தின் போது உயிரிழந்த ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு மீண்டும் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டதை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால், அவர் பதவியை ராஜினாமா செய்து வங்கதேசத்தை விட்டு வெளியேறினார். தற்போது அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது வங்க தேசத்தின் தந்தை என அறியப்படும் ஷேக் முஜிபுர் ரகுமானின் புகைப்படம் நீக்கப்பட்ட புதிய கரன்சி நோட்டுகள் வங்கதேச அரசு வெளியிட்டது.எந்த ஒரு தனிமனிதன் படமும் இல்லாமல் இந்து கோயில்கள் மற்றும் புத்த மத அடையாளங்களுடன் புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டன.புதிய கரன்சி நோட்டுகளில் வங்க தேசத்தின் இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் அடையாளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று வங்கதேச வங்கியின் செய்தித் தொடர்பாளர் ஆரிஃப் ஹொசைன் கான் தெரிவித்தார்.

