இந்த ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் ஐ ஏ எப் உலக விண்வெளி விருது, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் மிகுந்த அங்கீகாரம் பெற்ற இந்த விருதை பெற்றதால் அனைத்து நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளார். ஐஏஎப் உலக விண்வெளி விருது வழங்கும் விழா மற்றும் சர்வதேச விண்வெளி கருத்தரங்கம் இத்தாலியின் மிலன் நகரில் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இஸ்ரோ அமைப்பின் சார்பில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகள் மற்றும் சந்திரனின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான் 3 திட்டம் ஆகியவற்றுக்கு பெரிதும் பாராட்டுகள் வழங்கப்பட்டன. சர்வதேச அளவில் விண்வெளி துறையில் மிகுந்த உயரிய விருது பெற்ற சோம்நாத்துக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இஸ்ரோ வெளியிட்ட நன்றிகூறும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த அங்கீகாரம் இந்தியாவின் விண்வெளி ஆய்வு துறையில் செய்துள்ள பங்களிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியில் நடைபெற்ற இந்த விருது, புதிய இலக்குகளை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளது. குறைந்த செலவில் திறமையான பொறியியல் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்து, இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என ஐஏஎப் பாராட்டியுள்ளது. இந்த திட்டத்தில் ஏற்பட்ட சவால்களை வெற்றிகரமாக சமாளித்து, குழுவினரை இலக்கை அடைய வழிகாட்டிய சோம்நாத்தின் பங்கு முக்கியமானது. அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில், சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது மற்றும் சந்திரன் தொடர்பான புதிய ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக மாறியுள்ளது என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி சந்திரயான்-3 நிலத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதை நினைவுகூரும் வகையில், மத்திய அரசு இந்த நாளை தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.