ஹைதராபாத்தில் மொபைல் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய 11 சமூக வலைதளப் பிரபலங்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பெரும் பின்தொடர்புகளை கொண்ட பிரபலங்கள், பணம் சம்பாதிக்க பல்வேறு பொருட்கள் மற்றும் உணவுகளை விளம்பரப்படுத்துகின்றனர். இதனால், அவர்கள் அதிக வருமானம் பெறுவதோடு, தவறான விளம்பரங்கள் மூலம் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். மியாபூர் பகுதியில் வசிக்கும் வினய் வங்கலா என்ற நபர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர் அளித்த புகாரின் அடிப்படையில், சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய 11 சமூக வலைதளப் பிரபலங்கள் மீது பஞ்சகுட்டா பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர் அளித்த புகாரில், “பொது சூதாட்டச் சட்டம் 1867-ன் அடிப்படையில், இந்த செயலிகள் மற்றும் வலைதளங்கள் சூதாட்ட சட்ட விதிமுறைகளை முற்றிலும் மீறுகின்றன. மேலும், நான் ஒரு முறை சூதாட்ட செயலியை பயன்படுத்தி பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, இதுபற்றி விளம்பரப்படுத்தும் நபர்களுக்கு எதிராக நான் புகாரளித்தேன்” எனக் கூறியுள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த காவல்துறையினர், “சூதாட்ட செயலிகள் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்க முடியும் என இளைஞர்களையும் பொதுமக்களையும் ஏமாற்றி, அவர்கள் மீது குறிவைக்கின்றன. எனவே, இந்த செயலிகளை விளம்பரமாக்கிய நபர்களுக்கு தொடர்புடைய சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர். கைது செய்யப்பட்டவர்கள் யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் சின்னத் திரை பிரபலங்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

