அரியலூர் மாவட்டம், வெற்றியூர் மதுரா, விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசுகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அரசு வழிகாட்டுதலின்படி உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் எதிர்பாராத விதமாக வெடி விபத்துகள் ஏற்பட்டு அசம்பாவிதமும், உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றது.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம், கீழப்பலூர் அருகே உள்ள வெற்றியூர் ஊராட்சியில் உள்ள விரகாலூர் கிராமத்தில், ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் பட்டாசு ஆலை மற்றும் குடோன் செயல்பட்டு வருகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் நாட்டுப்பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. தீபாவளி விற்பனைக்காக ஃபேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்க சிவகாசி அருகே உள்ள சாத்தூரில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.
இன்று காலை 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிக்கு வந்து வழக்கம்போல் பணி செய்து வந்தனர். இதில் சிலர் உணவு இடைவெளிக்காக வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காலை 9.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்ப தயாராக இருந்த பட்டாசுகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருந்தன.
இந்த விபத்தில் 11 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களின் உடல்களும், ஆலையில் இருந்த பொருட்களும் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுக் கிடந்தன. மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 9 பேரில் 5 பேர், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 4 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயை ஓரளவு கட்டுப்படுத்திய அவர்கள், இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என ஆய்வு செய்கின்றனர்.

