ஐடிஆர் 1 முதல் ஐடிஆர் 7 வரை பல்வேறு பிரிவினருக்கான வருமான வரி படிவங்களை வருமான வரித்துறை 2025-26 ஆண்டுக்காக வெளியிட்டுள்ளது. தற்போதைய நிதியாண்டில் வருமான வரியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தனிநபர்கள் பங்கு முதலீடுகளில் நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு ரூ.1.25 லட்சம் வரை வருமான வரி விதிக்கப்படாது, ஆனால் அதற்கு மேல் 12.5 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். 2025-26 ஆண்டுக்கான புதிய ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 படிவங்களை வருமான வரித்துறை கடந்த ஏப்ரல் 29ம் தேதி அறிமுகம் செய்துள்ளது. கணக்குகளை தணிக்கைக்கு உட்படுத்த தேவையற்ற தனிநபர்கள் ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். ஐடிஆர் 1 (சகஜ்) மற்றும் ஐடிஆர் 4 படிவங்கள் சிறு மற்றும் நடுத்தர வரி செலுத்துவோருக்கானவை. மாத சம்பளம், வீட்டின் மூல வருவாய், வட்டி உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை ஈட்டுவோர் இதனை தாக்கல் செய்யலாம். இதற்கேற்ப, தொழிலின் மூலம் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஐடிஆர் 4 படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.மூலதன ஆதாய வரியில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப, ஐடிஆர் 2, 3, 5, 6 மற்றும் 7 என்ற படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மூலதன ஆதாய வரி 2024 ஜூலை 23ம் தேதிக்கு முன்பாக அல்லது பின்பாக பிரிக்கப்பட்டு குறிப்பிடப்பட வேண்டும். இதற்கேற்ப, நிறுவனங்கள், எல்எல்பி மற்றும் கூட்டுறவு சொசைட்டிகளுக்கு ஐடிஆர் 5, கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு ஐடிஆர் 6, அறக்கட்டளைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு ஐடிஆர் 7 படிவங்கள் வருமான வரித்துறையால் வெளியிடப்பட்டுள்ளன.

