கடந்த சில ஆண்டுகளாக மாரடைப்பால் இளம் வயதினர் திடீரென மரணமடைவது அதிகமாக காணப்படுகிறது. 10-15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்றைய மக்களிடையே இதய நோய் மற்றும் மாரடைப்பு பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில் இந்த போக்குகள் அதிகரித்து காணப்படுவதாக பல்வேறு மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.
மரபியல், ஆரோக்கியமற்ற உணவு, உடல் செயல்பாடு இல்லாமை போன்ற பல்வேறு காரணிகள் மாரடைப்புக்கு வழிவகுத்தாலும், கொரோனா தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் ஏற்பட்டு வரும் மாரடைப்பு சம்பவங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தன.
இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்றுக்கும் மாரடைப்புக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதை கண்டறிய ஆய்வை தொடங்கியுள்ளதாகவும், 2- 3 மாத காலங்களில் முடிவுகள் தெரியவரும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேசிய அவர், “சமீபத்தில் இளம் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதே திடீரென மாரடைப்பு காரணமாக இறப்பதைக் கண்டோம். இது, தொடர்பான செய்திகள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. இதுபற்றி நாங்கள் ஆய்வைத் தொடங்கியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
