வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன்-3 விண்கலம் – விஞ்ஞான ஆராய்ச்சியில் இந்தியா ஓர் புதிய மைல்கல்

அரசியல் அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் இன்று மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், “திட்டமிட்டபடி விண்கலம் பூமியில் இருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சந்திரயான்-3 நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது. இனி எல்லாம் சரியாக நடைபெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார். ‘மிஷன் அக்கம்ப்ளிஷ்ட்’ என்று ஆங்கிலத்தில் அவர் உரையைத் தொடங்கியதும் அரங்கில் கரகோஷம் எழுந்தது.
தொடர்ந்து பேசிய சந்திரயான்-3 திட்ட இயக்குநர் மோகன் குமார், “சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் மூலம் மீண்டும் அது மிகவும் வலுவான ஒரு விண்கலம் என்பதை உலகுக்கு நிரூபித்துள்ளது” என்று பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து இந்தத் திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும் நன்றியையும் அவர் பதிவு செய்தார்.
பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றுள்ளார். சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படும் நிகழ்வை அங்கிருந்தவாறே பிரதமர் கவனித்து வந்தார். இந்நிலையில், “இந்தியாவின் விண்வெளி சாகசத்தில் புதிய அத்தியாயத்தை சந்திரயான்-3 படைத்துள்ளது. அது உயரப் பறந்து ஒவ்வொரு இந்தியரின் லட்சியங்களையும், கனவுகளையும் உயர்த்தியுள்ளது. இந்த மகத்தான சாதனை நமது விஞ்ஞானிகளின் இடையறாத அர்ப்பணிப்புக்கு சான்றாகும். அவர்களது உணர்வுக்கும், மதிநுட்பத்துக்கும் நான் தலைவணங்குகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தில் பணியாற்றியவர்கள் 54 பேர் பெண்கள் என்பது இப்போது தெரியவந்துள்ளது. இவர்கள் பொறியாளார்கள், விஞ்ஞானிகள் பதவியில் இருப்பவர்களாவர். மேலும் சந்திராயன் 3 திட்டத்தில் இணை இயக்குநர்கள், திட்ட மேலாளர்களாக பணி புரிந்துள்ளனர். சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநர் மோகன் குமார். ராக்கெட் இயக்குநர் பிஜு சி தாமஸ். விண்கல இயக்குநர் டாக்டர் பி.வீரமுத்துவேல். இவர்களுடன் சேர்த்து 54 பெண்கள் இந்தத் திட்டத்தில் முக்கியப் பணியாற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *