அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம், ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் மூன்றாம் நீதிபதி தீர்ப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அடையாறு பகுதியில் உள்ள அவரது வீட்டில் விசாரணை நடத்திய பிறகு நள்ளிரவில் கைது செய்தனர்.
அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இருதய பைபாஸ் அறுவை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிபதி நிஷாபானு மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கு 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை மூன்றாவது நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன்பு நடைபெற்றது. கடந்த திங்கள் கிழமை வழக்கு நடைபெற்று ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று முந்தினம் விசாரணை நடைபெற்ற நிலையில், இருதரப்பினரும் வாதங்களை முன்வைத்தனர்.
செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார்.இதேபோன்று அமலாக்கத் துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்து நிறைவு செய்தார். இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வரும் இன்று (14ஆம் தேதிக்கு) வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றைய தினம் 3ஆவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பை வாசித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். கைது செய்யப்பட்டால் கஸ்ட்டடியிம் எடுக்க வேண்டியது அவசியம். அமலாக்கத் துறைக்குக் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது. நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பில் உடன் படுகிறேன்.
மருத்துவமனை சிகிச்சை காலத்தை முதல் 15 நாள் நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா? கூடாதா என்பதை பொறுத்தவரை, சட்டப்படி முதல் 15 நாட்களில் காவலில் எடுக்க வேண்டும். காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்த போதும், அவரை காவலில் எடுக்க அமலாக்கத் துறை முயலவில்லை. செந்தில் பாலாஜியின் உடல் நிலை சாதகமாக இல்லாததால் காவலில் எடுக்கவில்லை என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜியின் சிகிச்சை நாட்களை நீதிமன்றம் நாட்களாகக் கருத முடியாது. சிகிச்சைக்குப் பிறகு கஸ்ட்டடி எடுக்கலாம். அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததை எதிர்க்காத நிலையில், அதன் பின் நடக்கும் சோதனை, விசாரணை ஆகியவற்றை எதிர்க்க முடியாது. கைது சட்டப்பூர்வமானது. நீதிமன்ற காவல் சட்டப்பூர்வமானது. எனவே இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.
நீதிமன்ற காவல் வைத்த பின் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார் செந்தில் பாலாஜி. நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின் அவர் அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை. செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். பல முறை சம்மன் அனுப்பியும் அவர் சில முறை ஆஜராகியுள்ளார். சில முறை ஆடிட்டர்க்ள் ஆஜராகியுள்ளனர்.
அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை செந்தில் பாலாஜி எதிர்த்து வழக்கு தொடரவில்லை. செந்தில் பாலாஜிக்கும், அவரது சகோதரருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது சட்டப்படியானது. நீதிமன்ற காவல் சட்டப்படியானது. ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல என 3ஆவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *