பிரதமருக்கு வழங்கப்படும் பரிசுகளை அரசு கருவூலத்துக்கு அளிக்க மறுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
பாகிஸ்தானில் பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது கிடைக்கும் பரிசுப்பொருட்களை அரசு சேமிப்பு கருவூலத்துக்கு அளிப்பது வழக்கம். இந்த சேமிப்பு இடங்கள் டோஷா கானா என்று அழைக்கப்படுகிறது. பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது கிடைத்த பொருட்களை அரசு சேமிப்புக்கு அளிக்காமல் தனது வீட்டிலேயே இம்ரான் வைத்துக்கொண்டார் என்று புகார் எழுந்தது
இது தொடர்பான தரவுகளை இம்ரான் கான் மறைத்துவிட்டதாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹுமாயூன் திலாவர் இந்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என்றும் 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கவும் ஆணையிட்டார். மேலும் இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது என தெரியவருகிறது.
இதையடுத்து இம்ரான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அபராதமாக இம்ரான் கான் 1 லட்சம் பாகிஸ்தானிய ரூபாய் செலுத்தவும் நீதிபதி ஆணையிட்டார். இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கை குறித்து முன்னதாக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இம்ரான் கான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “எனது கைது எதிர்பார்க்கப்பட்டது தான். முன்கூட்டியே இந்த தகவலை பதிவு செய்துள்ளேன்.
‘லண்டன் திட்டத்தை’ நிறைவேற்றுவதற்கான ஒரு படியாகத் தான் இந்த கைது நடவடிக்கையைப் பார்க்கிறேன். ஆனால், எனது ஆதரவாளர்கள் அமைதியாகவும், உறுதியாகவும், வலிமையாகவும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆண்டவனைத் தவிர வேறு யாருக்கும் நாங்கள் தலைவணங்குவதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

