அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான
எம்ஜிஆரின்
36-வது நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுக சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் எம்ஜிஆரின் சிலைக்கு கட்சியினர் மரியாதை செலுத்தினர். சென்னை மெரினா கடற்கரையில், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், மோகன், வளர்மதி, கோகுலஇந்திரா, திண்டுக்கல் சீனிவாசன், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட பலர் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். மேலும், எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி, அதிமுக சார்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் திரளான கட்சித் தொண்டர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

