சமீபத்தில் முடிவடைந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய தலைமை பயிற்சியாளருக்கான ராகுல் டிராவிட்டின் பதவிகாலம் முடிவுக்கு வந்தது. உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் போனதால் ராகுல் டிராவிட் பதவியில் தொடர மாட்டார், பிசிசிஐ வேறு தலைமை பயிற்சியாளரை நியமிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், ராகுல் டிராவிட் உடன் கலந்துரையாடிய பிசிசிஐ, ஒரு ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பிறகு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்ந்து செயல்படுவதற்கும், அவருடைய குழுவினரும் தொடர்ந்து செயல்படுவதற்கும் ஒருமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிசிசிஐ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்திய அணியை வடிவமைப்பதில் டிராவிட்டின் முக்கிய பங்கை பிசிசிஐ மதிப்பதோடு, அவரது விதிவிலக்கான தொழில்முறையையும் பாராட்டுவதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் டிராவிட் உடன் NCA-ன் தலைவராகவும், டிராவிட் இல்லாத போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் செயல்படும் VVS லக்சுமனையும் பாராட்டியுள்ளது.

