திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி. 22 வயதே ஆன இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய உரிமையில் நீதிபதி தேர்வு எழுதியிருந்தார். அதில் வெற்றி வாகை சூடியுள்ள ஸ்ரீபதி, 6 மாத கால நீதிபதி பயிற்சிக்கு செல்ல உள்ளார். நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய ஸ்ரீபதிக்கு ஊர் மக்கள் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேளதாளம் முழங்க பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மக்கள் அனைவரும் ஊர்வலமாக அழைத்து வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
அடிப்படை வசதி கூட இல்லாத மலை கிராமமான ஜவ்வாது மலையில் படித்து நீதிபதியாக உயர்ந்துள்ள ஸ்ரீபதிக்கு பக்கத் துணையாக இருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் ஸ்ரீபதியின் கணவர் வெங்கடராமன். தொழில்நுட்பம் எப்படி வளர்ந்தாலும் ஆணாதிக்க சிந்தனைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் பஞ்சமில்லாத சமூகத்தில் ஸ்ரீபதியின் கனவுக்கு பாராசூட் கட்டிவிட்டவர். தனது ஆசைகளுக்கு தடை கல்லாக நிற்காமல் வழிதுணையாக இருந்தவர் என பெருமிதம் கூறுகிறார் ஸ்ரீபதி.
தமிழ்வழியில் படித்து தடை கற்களை தகர்த்தெரிந்து சாதனை பெண்ணாக உயர்ந்துள்ள நீதிபதி ஸ்ரீபதிக்கு பல்வேறு தரப்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

