வாடிகனில் போப் 14ம் லியோ பதவியேற்பு, புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற முதல் திருப்பலி.

அரசியல் ஆன்மீகம் உலகம் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி

போப் 14ம் லியோ, நேற்று வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் தனது பதவியை ஏற்றுக்கொண்டார். பின்னர், அவர் புகழ்பெற்ற புனித பீட்டர் சதுக்கத்தில் தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார். உலகம் முழுவதும் 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புதிய தலைவராக, போப் 14ம் லியோ (69) கடந்த 8ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவை சேர்ந்த இவர், நேற்று வாடிகனில் போப் ஆண்டவராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு போப் ஆண்டவருக்கான ‘பாலியம்’ (பட்டை) மற்றும் மோதிரம் அணிவிக்கப்பட்டது. பின்னர் புகழ்பெற்ற புனித பீட்டர் சதுக்கத்தில், போப் ஆண்டவராக தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார். திருப்பலியில் அவர் ஆற்றிய மறையுரையில், தனது போப் பணிக்காலத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார். அன்பு மற்றும் ஒற்றுமை ஆகிய இரட்டை பரிமாணங்கள் மூலம், திருச்சபையை ஒரு ஊழியராக வழிநடத்த விரும்புவதாக அவர் தெரிவித்தார். இதற்கான அவரது கருத்து: ‘நமது திருச்சபை ஒற்றுமை மற்றும் இணக்கத்தின் அடையாளமாக, ஒரு ஒன்றுபட்ட திருச்சபையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது ஒரு சமரசமான உலகத்திற்கு அடிப்படையாக இருக்கும்.’இந்த நமது காலத்தில் வெறுப்பு, வன்முறை, பாரபட்சம், வேறுபாடு, பூமியின் வளங்களை சுரண்டுதல் மற்றும் ஏழைகளை ஓரங்கட்டுதல் போன்ற காரணங்களால், நாம் இன்னும் அதிக அளவிலான முரண்பாடுகள் மற்றும் காயங்களை காண்கிறோம். கடவுளின் அன்பின் அடிப்படையில் உருவாகும் ஒரு திருச்சபை, ஒற்றுமையின் சின்னமாக, உலகிற்கு தனது கரங்களை விரித்து, வார்த்தையை பரப்பி, மனிதகுலத்துக்கு நல்லிணக்கத்தின் அடிப்படையாக மாறும் ஒரு பணி ஆக வேண்டும் என்று போப் 14ம் லியோ கூறினார்.போப் 14ம் லியோவின் இந்த திருப்பலியில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், பெரு நாட்டின் ஜனாதிபதி டினா பொலுவார்ட், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவின் மந்திரி ஓல்கா லியுபிமோவா மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், இளவரசர்கள், கார்டினல்கள், பிஷப்கள், பாதிரியார்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *