அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பிறகு முதல் முறையாக நடிகர் விஜய் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பேச உள்ளார். அதில் அரசியல் பேச்சு இடம் பெற வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு போல் இல்லாமல், இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 28ஆம் தேதி கோவை, நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறார். அதற்குப் பிறகு ஜூலை மூன்றாம் தேதி மீதமுள்ள மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வழங்க உள்ளார். கடந்த ஆண்டு சுமார் 12 மணி நேரத்திற்கு மேல் மேடையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதைத் தவிர்க்கும் வகையில் இந்த முறை இரண்டு கட்டமாக ஊக்கத்தொகை வழங்கும் விழாவை விஜய் நடத்துகிறார்.
ஊக்கத்தொகை வழங்கும் விழாவிற்கு பிறகு, விஜய் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு வெளியாக உள்ளது. அதன் பின் மாற்று கட்சியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியில் சேர்க்கும் பணி தொடங்க உள்ளது. அதை தொடர்ந்து முதல் அரசியல் மாநாடு என அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளை விஜய் நடத்த உள்ளார். அதற்கு முதல் கட்டமாகவே இந்த ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி அமைந்துள்ளது.

