சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 471 நாட்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.
அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி. அப்போது அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.
2023 ஜூன் 13 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
பல மணிநேர சோதனையின் தொடர்ச்சியாக ஜூன் 14-ஆம் தேதி அதிகாலை 1.50 மணியளவில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கழிந்த நிலையில், கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே, கடந்த மார்ச் 18-ஆம் தேதி ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் ஓராண்டுக்கும் மேலாக சிறையிலிருந்த செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

