விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்திற்கு முன்னோட்டமாக பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது; கவுன்ட்டவுனை தொடங்கியது இஸ்ரோ

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விண்வெளி சார்ந்தவை வினோதங்கள்

விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்திற்கு முன்னோட்டமாக பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் நாளை இரவு விண்ணில் ஏவப்பட உள்ளது. விண்வெளியில் இந்தியா செய்யப்போகும் சாதனை என்ன? என்று இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
2035ஆம் ஆண்டு விண்வெளியில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கு முன் தயாரிப்பாக SpaDex என்ற திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. இதற்காக திங்கட்கிழமை இரவு 9.58 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட் மூலம் தலா 220 கிலோ எடை கொண்ட இரண்டு விண்கலன்கள் விண்வெளிக்கு ஏவப்பட உள்ளன. இதற்கான 48 மணி நேர கவுன்ட்டவுன் சனிக்கிழமை இரவு தொடங்கியது.
இந்த இரண்டு விண்கலன்களும் பூமியில் இருந்து 355 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள புவி தாழ்வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்ட பின்னர் அவை பூமியை சுற்றிவரும் போது டாக்கிங் முறையில் இணைக்கும் சோதனை நடத்தப்பட உள்ளது.
இந்த சிக்கலான பணியைத்தான் SpaDex விண்கலம் மேற்கொள்ள உள்ளது. இந்த விண்கலத்தில் சேசர் மற்றும் டார்கெட் எனும் இரண்டு அமைப்புகள் உள்ளன. இரண்டு அமைப்புகளும் அதிவேகமாக பூமியைச் சுற்றி வரும் வேளையில், சேசர் அமைப்பு டார்கெட் அமைப்பை துரத்தி விரைவாக அதனுடன் இணைய வேண்டும். விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட 10 நாட்களுக்குப் பிறகே அவற்றை இணைக்கும் பணி நடைபெறும் என்று மூத்த விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.
இஸ்ரோவின் டாக்கிங் சோதனை வெற்றிபெற்றால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு மனிதர்களை அனுப்புவது முதல் இந்தியாவுக்கு விண்வெளியில் தனி ஆராய்ச்சி மையத்தை அமைக்கும் திட்டம் வரை பலவற்றிற்கு அடித்தளமாக அமையும். அத்துடன், ரஷ்யா, அமெரிக்கா, சீனா வரிசையில் டாக்கிங் சிஸ்டத்தை வைத்திருக்கும் நான்காவது நாடு என்ற சாதனையும் படைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *