சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு செல்போன் ஆப்பை பயன்படுத்தி, இ-ரிக்சாக்களை முடக்கி ஓட்டுநர்களிடம் பணம் பறிக்கும் மோசடி குறித்து ஒன்றிய அரசு தீவிரமாக விசாரித்து வருகிறது.இந்தியாவில் பயன்படுத்தப்படும் சில குறைந்த விலை இ-ரிக்சா மற்றும் மின்சார ஸ்கூட்டர்களில் உள்ள பேட்டரி மேலாண்மை அமைப்பில் (BMS) பாதுகாப்பு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, மர்ம நபர்கள் ப்ளூடூத் மூலம் அருகில் இருக்கும் வாகனங்களின் பேட்டரியை முடக்குகின்றனர்.இந்த செயல் முதலில் சமூக வலைதளங்களில் வேடிக்கையாக தொடங்கப்பட்டாலும், தற்போது ஓட்டுநர்களிடம் ரூ.100 முதல் ரூ.300 வரை பணம் பறிக்கும் மோசடியாக மாறியுள்ளது. இது தொடர்பாக மத்திய பிரதேச போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் தினக்கூலி இ-ரிக்சா ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதால், ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த விவகாரத்தை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.இதற்கிடையே, இ-ரிக்சா ஓட்டுநர்கள் தங்களது வாகனத்தின் பேட்டரி அமைப்பில் இருக்கும் இயல்புநிலை கடவுச்சொல்லை உடனடியாக மாற்றி, வலுவான கடவுச்சொல்லை அமைக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், தேவையில்லாத நேரங்களில் ப்ளூடூத் வசதியை அணைத்து வைக்கவும், யாரேனும் பணம் கேட்டு மிரட்டினால் உடனடியாக போலீசாரிடம் புகார் அளிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

