ராகேஷ் சவுகான் (33) என்பவர் உத்தரபிரதேச மாநிலம் தேவரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 2025 நவம்பரில், தனியார் நிறுவனம் மூலம் வணிகக் கப்பலில் மாலுமியாக பணியாற்ற வெனிசுலா சென்றார். அங்கு கப்பலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, அவரது உடல் ஒரு மாதம் கழித்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் கூறி, மறுஉடற்கூராய்வு செய்ய கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தேவரியா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.மருத்துவர்களின் அறிக்கையில், ராகேஷ் சவுகானின் உடலில் மூளை, இதயம், நுரையீரல்கள், கல்லீரல், சிறுநீரகங்கள், மண்ணீரல், கணையம், வயிறு, தைராய்டு உள்ளிட்ட பல முக்கிய உடல் உறுப்புகள் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கழுத்து முதல் அந்தரங்க பகுதி வரை 60 செ.மீ. நீள தையல் காயமும், தலையின் பின்புறத்தில் 20 செ.மீ. நீள மற்றொரு தையல் காயமும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.முக்கிய உடல் உறுப்புகள் இல்லாததால், அவரது மரணத்திற்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து ராகேஷ் சவுகானின் தந்தை ராம்தேவ் சவுகான், தனது மகனின் மர்ம மரணம் மற்றும் உடல் உறுப்புகள் மாயமான விவகாரம் குறித்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடுநிலையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

