அரசியலில் தன்னுடைய ரோல் மாடல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் என்று கூறிய திவ்யா, அரசியலுக்கு வரவேண்டும் என்பது கல்லூரி காலத்து ஆசை என்றார்.
முதலமைச்சரும், திமுக தலைருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் இன்று (19.1.2025) காலை திமுகவில் இணைந்தார். அப்போது, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிலையில், திவ்யா சத்யராஜ் நியூஸ் 18க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “2024 தேர்தலில் சில கட்சிகளிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்தக் கட்சி எதுவென்று இப்போது சொல்ல வேண்டாம். மக்கள் பணி செய்வதற்காக திமுகவில் இணைந்துள்ளேன். பதவி ஆசை எனக்கு கிடையாது. அரசியலில் என்னுடைய ரோல் மாடல் கலைஞர் தான். அரசியலுக்கு வர வேண்டும் என்பது கல்லூரி காலத்தில் இருந்தே என்னுடைய ஆசை.
அம்மாவை கவனித்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்ததால் முன்னரே அரசியலுக்கு வரவில்லை. திமுக ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கட்சி என்பதால் இணைந்துள்ளேன். அப்பாவுக்கு அரசியலுக்கு வருவதில் விருப்பமில்லை. எனக்கு அரசியல் விருப்பம்.” என்று தெரிவித்தார்.

