பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் தனது வீட்டில் வைத்தே கொள்ளையனால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்ட சூழலில், சைஃபை தாக்கியதாக கூறப்படும் நபர், மொபைல் கடைக்கு சென்று HEADPHONE வாங்கிய வீடியோ வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து வழக்கில் பெரும் திருப்பமாக தாக்குதல் நடத்தியதாக கருதப்படும் நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். சத்தீஸ்கரில் ஞானேஸ்வரி விரைவு ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அந்நபரை கைது செய்ததாகவும், அவரது பெயர் ஆகாஷ் கைலாஷ் கனோஜியா என்பது தெரியவந்துள்ளதாகவும் ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை போலீசார் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சத்தீஸ்கரில் ரயில்வே போலீசார் இந்நபரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் புதிய திருப்பமாக தாக்குதல் நடத்தியதாக கருதப்படும் மற்றொரு நபரை தானேவில் வைத்து மும்பை போலீசார் கைது செய்தனர். கைதானவர் முதலில் தனது பெயர் விஜய் தாஸ் எனவும், பின்னர் முகமது சஜத் எனவும் மாறி மாறி தெரிவித்தாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கைதான நபர் ஹோட்டலில் ஊழியராக பணிப்புரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அவர்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இன்று காலை 9 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் குற்றவாளியின் முழு விவரம் வெளியிடப்படும் என்றும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

