இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் பதிவு மற்றும் பயணத்திற்கான பல்வேறு சேவைகளை வழங்கும் ‘SwaRail’ என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. தற்போது, இந்த செயலி பீட்டா சோதனைக்காக வெளியிடப்பட்டுள்ளது மற்றும் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மக்கள் போக்குவரத்திற்காக அதிகமாக பயன்படுத்தும் சேவைகள் மத்தியில் ரயில் சேவையே முக்கியமானது. குறுகிய தூரங்களிலிருந்து நீண்ட தூரங்களுக்கு பயணிக்க விரும்பும் மக்கள் பெரும்பாலும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், ரயில் பயணத்திற்கான பல மொபைல் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய ரயில்வே ‘SwaRail’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. சென்டர் ஃபார் ரயில்வே இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ், சிஆர்ஐஎஸ் என அழைக்கப்படும், இந்த செயலியை உருவாக்கியுள்ளது. பயணிகள் ரயில் டிக்கெட் பதிவு செய்வதற்கும், பிஎன்ஏர் நிலையை தெரிந்து கொள்ளவும், பயணத்தின் போது உணவு ஆர்டர் செய்யவும், பல்வேறு சேவைகளை இந்த செயலி வழங்குகிறது. தற்போது பயணிகள் முன்பதிவு மற்றும் அன்ரிசர்வ்டு (Unreserved) டிக்கெட்டுகளை பெற பல்வேறு செயலிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கான தீர்வாக ‘SwaRail’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் பீட்டா சோதனை முடிந்த பிறகு, அது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் பயனர்களுக்காக கிடைக்கப்பெறும் என கூறப்படுகிறது.

